ஆபிரகாம் ABRAHAM 55-06-24 ஜூரிக், ஸ்விட்சர்லாந்து 1. மாலை வணக்கம் நண்பர்களே. இன்றிரவு நான் மீண்டும் இங்கே இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் சற்று களைப்பா யிருக்கிறேன். நான் அமெரிக்காவை விட்டுப் புறப்படுவதற்கு முன்பு, அநேக மகத்தான ஆராதனைகளை நடத்தி முடித்து விட்டேன். எனவே கர்த்தருக்குச் சித்தமானால், நான் வீட்டிற்குப் போகும் போது, சற்று ஓய்வு எடுக்கப் போகிறேன். ஆனால் இங்கே சுவிட்சர்லாந்திலுள்ள அருமையான ஜனங்களாகிய உங்கள் மத்தியில் இருப்பதற்கு நிச்சயமாகவே நாங்கள் நன்றியுள்ளவர் களாயிருக்கிறோம். நான் எல்லாவிடங்களுக்கும் பிரயாணம் செய்துள்ளேன் என்று நம்புகிறேன், சுவிட்சர்லாந்தில் நான் சந்தித்த ஜனங்களாகிய உங்களைக் காட்டிலும் அருமையான ஜனங்களை நான் கண்டதேயில்லை. அது உண்மை. நான் அவ்வாறு தான் கருதுகிறேன். நான் அதைக் கூற வேண்டியதில்லை, ஆனால் என்னுடைய இருதயத்திலிருந்து நான் அவ்வாறு கருதுகிறேன். ஆனால் கர்த்தர் உங்களை அதிகமாய் ஆசீர்வதிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம், நீங்கள் எனக்கு ஆசீர்வாதமாக இருப்பது போன்று அவ்வளவு அதிக ஆசீர்வாதமாக நானும் உங்களுக்கு இருப்பேன் என்று நம்புகிறேன். தேவனுக்குச் சித்தமானால், ஒருக்கால், வருங்காலத்தில் ஏதோவொரு நேரத்தில் நான் மீண்டும் திரும்பி வரக் கூடுமானால், ஒருவேளை, நீண்ட காலம் உங்களோடு இருப்பேன். வெறுமனே இன்னும் இரண்டு இரவு ஆராதனைகளை நடத்தி விட்டு, பிறகு நான் போக வேண்டியிருக்கிறதே என்று நினைக்கிறேன். 2. வழக்கமாக அந்தவிதமாகத்தான் நடக்கிறது, நீங்கள் சற்று ஜனங்களோடு பழகும் போது, அப்போதே விடைபெறுகிறேன் என்று கூற வேண்டியிருக்கிறது. ஆனால் ஏதோவொரு நாளில், அங்கே - அல்லது நாம் எல்லாரும் ஒரே பாஷையைப் பேசுவோம், அப்போது நாம் வயோதிபம் அடையவே மாட்டோம், வியாதியோ மரணமோ இருக்காது என்று நம்புகிறேன். நாம் மறுபடியும் சந்திப்போம், அப்போது நான் உங்கள் ஒவ்வொருவரோடும் ஆயிரம் வருடங்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய விரும்புகிறேன். அப்போது நமக்கு நிறைய நேரம் உண்டாயிருக்கும். இதுவே பகற்காலம்; பகற்காலம் இருக்கும்போதே நாம் கிரியை செய்தாக வேண்டும். ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. இப்பொழுது, இங்கே நிறைய கடிதங்கள் உள்ளன, நீங்கள் தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இப்பொழுது, யாராவது இதைத் தவறாகப் புரிந்து கொள்ளலாம், ஆனால் இந்த - நாங்களே இந்தக் கடிதங்களில் எதையோ இணைத்திருக்கிறோம் என்பதாக இவைகள் இருக்கவில்லை, இது வெறுமனே தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதாகும். இந்த விதமாக சுகமடைந் திருக்கிற ஜனங்களைப் பற்றிய ஆயிரக்கணக்கான சாட்சிககளை வீட்டில் நான் வைத்திருக்கிறேன். தேவனே தம்முடைய வார்த்தையை கனப்படுத்தினார். 3. இப்பொழுது, நாங்கள் அவர்களுக்காக ஜெபிக்கப் போகிறோம், தேவன் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நீங்கள் என்னோடு கூட உங்கள் தலைகளை வணங்க முடியுமா - உங்கள் தலைகளைத் தாழ்த்தி என்னோடு கூட ஜெபிப்பீர்களா? தேவன் உங்களுடைய ஜெபத்தையும் கூட கேட்பார். 4. எங்கள் பரலோகப் பிதாவே...?... நாங்கள் இந்த கைக்குட்டைகளின் பேரில் ஜெபம் செய்கையில், உமது ஆவி தாமே எங்கள் மேல் வருவதாக. மனிதனாக எங்களில் எதுவுமில்லை என்றும், வெறுமனே உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறோம் என்றும் உணர்ந்து கொள்கிறோம். அந்தக் கம்பத்தின் மேல் தூக்கி வைத்திருந்த சர்ப்பத்தில் எந்த வல்லமையும் இல்லாதிருந்தது. அது தூக்கி வைக்கப்பட்டிருந்த அந்த கம்பத்திலும் எந்த வல்லமையும் இல்லாதிருந்தது. ஆனால் (அதை) நோக்கிப் பார்த்தவர்கள் பிழைத்துக் கொண்டார்கள், அது தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதாக இருந்தது. ஓ தேவனே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, அவைகளைப் போன்றே இவைகளும் இருப்பதாக, இவைகள் வியாதியஸ்தரிடம் கொண்டு போகப்படும் போது, அவர்கள் ஒவ்வொருவரும் சுகமடைவார்களாக. பிதாவே, உம்முடைய ஊழியக்காரர்களுக்கு உமது பார்வையில் கிருபை கிடைக்குமானால், இதுவும் அவ்விதமாகவே இருப்பதாக. இயேசுவின் நாமத்தில், ஆமென். 5. நாங்கள் இரவில் சற்றே மிகவும் தாமதமாக பிடித்து வைத்திருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டேன். அநேக ஜனங்கள் 9:30 மணிக்கு ரயிலைப் பிடிக்க வேண்டியிருந்ததாக எங்கள் பயணக்குழுவிலிருந்த யாரோ ஒருவர் சென்ற மாலையில் என்னிடம் கூறிக் கொண்டிருந்தார். உரிய நேரம் கடந்தும் நான் உங்களைப் பிடித்து வைத்திருந்ததற்காக வருந்துகிறேன். நான் அவ்வாறு செய்ய நினைக்கவில்லை, நான் - ஆனால் நான் -கூடுதலாக அதிக நேரம் எடுத்துக்கொண்டு விட்டேன். தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். ஆதியாகமம் 22-ம் அதிகாரம், 7வது வசனம் தொடங்கி, நாம் இந்த வேதவாக்கியத்தை வாசிப்போம். அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய், இப்பொழுது, 24வது வசனம். (ஆதியாகமம் 22:14 -தமிழாக்கியோன்.) ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. 6. நாம் மீண்டும் நம்முடைய தலைகளை வணங்குவோமா? சர்வவல்லமையுள்ள தேவனே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, நன்மையான சகல ஆவிக்குரிய ஈவுகளையும் அருளுபவரே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, உம்முடைய வார்த்தையின் மேல் உமது ஆசீர்வாதங்களை அனுப்பும். பேசுகிற உதடுகளையும், கேட்கிற இருதயங்களையும் விருத்தசேதனம் பண்ணி, இன்றிரவு தேவனுடைய விதை தாமே இருதயங்களுக்குள் விழுந்து, அநேகர் கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து, தங்களுடைய வியாதிகளிலிருந்து சுகமடைவார்களாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். இப்பொழுது, நான் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளாதபடி நீங்கள் என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்காக நேரத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருங்கள். எனக்காக நேரத்தைப் பார்க்கும்படி அங்கே பின்னாலிருக்கும் மேலாளரிடம் நான் கூறினேன். 7. நாம் இன்றிரவு மறுபடியுமாக ஆபிரகாமைக் குறித்து பேச விரும்புகிறோம். அந்தப் பழைய (ஏற்பாட்டு) வேதாகம கதாபாத்திரங்கள் எனக்குப் பிடிக்கும், ஏனென்றால் பழைய ஏற்பாட்டினுடைய எல்லாமே புதிய ஏற்பாட்டிற்கு நிழலாயிருக்கிறது. அங்கே பின்னால் நீங்கள் காணும் சகல காரியங்களும் சிலுவையை நோக்கியே சுட்டிக்காட்டுகிறது, அதுமுதற்கொண்டு எல்லாமும் பின்னால் சிலுவையை நோக்கியே சுட்டிக் காட்டுகிறது. எனவே அங்கே சிலுவையில், விசுவாசிகளுக்கான இரட்சிப்பின் திட்டங்கள் எல்லாமும் சுகமளித்தலும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. இப்பொழுது, அவனுக்குச் செய்யப்பட்ட உடன்படிக்கையின் உறுதிப்பாட்டை கண்ட இடத்தில் நாம் கடந்த இரவு ஆபிரகாமை விட்டு வந்தோம். தேவன் அவனுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை அருளியிருந்தார் என்பதையும், ஆபிரகாம் அதை விசுவாசித்தான் என்பதையும், சரியாக அப்போதே அதை அவர் அவனுக்குக் கொடுக்காத போதிலும், அவர் அவனுக்கு வாக்குத்தத்தத்தை அருளினார் என்பதையும் நாம் எப்படியாக கண்டுகொண்டோம். எனவே நீங்கள் வாக்குத்தத்தத்தைப் பெற்றிருப்பீர்களானால், நீங்கள் எப்படியும் அதைப் பெற்று விட்டீர்கள். 8. நான் கேட்டுக்கொண்டால்... (இங்கே உங்களுக்கு கருவாலி மரங்கள் உண்டா? இங்கே கருவாலி மரங்கள் இருக்கிறதா?) [சகோதரன் பிரன்ஹாம் மொழிபெயர்ப்பாளரிடம் பேசுகிறார் - ஆசிரியர்.] ஒரு கருவாலி மரத்தைக் கொடுக்கும்படி நீங்கள் என்னிடம் கேட்டு, நான் உங்களுக்கு ஒரு கருவாலிக்கொட்டையைக் கொடுப்பேன் என்றால், நீங்கள் ஏற்கனவே ஒரு கருவாலி மரத்தை விதை வடிவில் பெற்று விட்டீர்கள். அதைத்தான் நாம் வார்த்தையாக வேதாகமத்திலிருந்து பிரசங்கிக்க முயற்சிக்கிறோம், அது விதை வடிவிலுள்ள தேவனுடைய வாக்குத்தத்தமாக உள்ளது. தேவனுடைய வார்த்தையானது விதைக்கிற ஒருவன் விதைத்த விதையாக உள்ளதாக இயேசு கூறினார். தேவனுடைய ஏதாவது-ஏதாவது தெய்வீக வாக்குத்தத்தத்தை நீங்கள் உங்கள் இருதயத்திற்குள் பெற்றுக்கொண்டு, அதனோடு எந்த அவிசுவாசமும் கலவாமல் இருக்குமானால், அது வாக்குத்தத்தம் பண்ணினதை அப்படியே பிறப்பிக்கும், அது தேவனுடைய வாக்குத்தத்தமாக உள்ளது. ஆபிரகாமைப் போன்று அப்படியே அசையாமல் அதில் உறுதியாக நில்லுங்கள், அப்பொழுது அவர் அதை உங்களுக்கு நிஜமாக்குவார். 9. இப்பொழுது, இந்த நாற்காலிகளிலும், தூக்குப்படுக்கைகளிலும் (டோலிகளிலும்) இருந்து, இங்கே கூட இருக்கிற ஜனங்களாகிய உங்களை தேவன் நேசிக்கிறார். உங்களுக்கு என்ன கோளாறு இருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, தேவன், அவர் சர்வவல்லமையுள்ளவராக இருப்பாரானால், அவரால் சகலத்தையும் செய்ய முடியும், அவரால் சகலத்தையும் செய்ய முடியவில்லை என்றால், அவர் சர்வவல்லமையுள்ள தேவன் அல்ல. நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்திராவிட்டால், நான் இங்கே நின்று கொண்டு, உங்களிடம் பேசவே மாட்டேன். நான்... இப்பொழுது ஒவ்வொரு இரவும், முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களோ, அல்லது ஏதோ கோளாறைக் கொண்ட யாரோ ஒருவரோ, தூக்குப்படுக்கையிலிருந்தோ அல்லது சக்கர நாற்காலியிலிருந்தோ எழுவதையும் நீங்கள் கவனிக்கிறீர்கள். அவர்கள் சுகமடைந்தவர்களாக வெளியே செல்வதையும், செவிடர்கள் கேட்பதையும், குருடர்கள் காண்பதையும், ஜீவனுள்ள தேவனுடைய அடையாளங்களையும் காண்கிறீர்கள். பாருங்கள், தேவன் இன்னும் ஜீவிக்கிறார். தேவன் பூமியை விட்டுப் போய் விடவில்லை. சிலசமயங்களில் அவர் தம்முடைய மனிதனை எடுத்துக்கொள்கிறார், ஆனால் அவருடைய ஆவியை எடுத்து விடுவதில்லை. அவர் எலியாவை எடுத்துக்கொண்டார், அவருடைய ஆவியோ எலியாவின் மேல் வந்தது. அநேக நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிற்பாடு, அது யோவான் ஸ்நானகனின் மேல் வந்தது, மேலும் இந்தக் கடைசி நாட்களில் அது மறுபடியும் வரும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. தேவனே அதை வாக்குப்பண்ணியுள்ளார். 10. இப்பொழுது, பிசாசு, அவன் தன்னுடைய மனிதனை எடுத்துக்கொள்கிறான், அதுவோ - அந்த ஆவியோ வேறு யாராவது ஒருவர் மேல் இங்கேயே தொடர்ந்து இருக்கிறது. பரிசேயர்கள் இயேசுவை விசுவாசிக்காத காரணத்தினால், அவர் அவர்களிடம் கூறினார். அவர்-அவர்கள்-அவர் அவர்களுடைய உபதேசத்தைப் போதிக்கவில்லை. அவர், 'நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்.' என்றார். 'தீர்க்கதரிசிகளை உங்கள் பிதாக்களில் யார் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்?' என்றார். பாருங்கள், அந்த ஆவி தொடர்ந்து இங்கேயே இருக்கிறது, அந்த நபர் தான் கடந்து போகிறான். அதன்பிறகு உயிர்த்தெழுதலில் நியாயத்தீர்ப்பு இருக்கிறது. இப்பொழுது, ஆபிரகாம் வெளியே ஒரு அந்நிய தேசத்திற்கு சென்று, தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பேரில் பரதேசியாய் சஞ்சரித்த முதலாவது நபராயிருந்தான். ஆனால் அவன் தன்னோடு சகவாசம் செய்த தன்னுடைய உலக கூட்டாளிகள் எல்லாரையும் விட்டுத் தன்னைத்தானே வேறுபிரித்துக் கொண்டு, தேவனோடு ஒரு சிநேகிதனாக இருக்க அவரோடு தனிமையாக நடந்தான். 11. தேவன் அந்த உடன்படிக்கையை எவ்வாறு உறுதிப்படுத்தினார் என்பதை சென்ற இரவு நாம் கண்டுகொண்டோம், அவர் கல்வாரியில் எதைக் காண்பித்துக் கொண்டிருந்தார் என்பதைக் குறித்த அழகான காட்சியை நாம் அங்கே கண்டுகொள்கிறோம், அங்கே தான் அவர் தம்முடைய சொந்த குமாரனை பலியாக கொடுக்கப் போவதாக இருந்தார். அதன்பிறகு அவர் மீண்டும் ஆபிரகாமுக்குத் தோன்றி, தாம் மார்பகம் கொண்டவர் என்பதை அவனிடம் கூறி, எனவே ஆபிரகாம் அவருக்கு ஒரு குழந்தையைப் போல இருக்க முடியும் என்றும், அப்படியே அவரிடமிருந்து பாலை, பலத்தை அருந்தும்படியாகவும் அவர் அவனிடம் கூறினார், காரணம் என்னவென்றால் ஆபிரகாம் வயது சென்றவனா யிருந்தான். அவனுக்கு ஏற்கனவே 100 வயதாயிருந்தது, சாராளுக்கு தொண்ணூறு வயதாக இருந்தது. கடைசியாக மாதவிடாய் நின்றுபோய் ஐம்பது வருடங்களோ அல்லது நாற்பது வருடங்களோ ஆகியிருந்தது. அவள் ஒரு சிறு பெண்ணாய் இருந்த போதே அவன் அவளை விவாகம் பண்ணியிருந்தான், அப்போது அவன் ஒரு வாலிபனாக இருந்தான். இந்த வருடங்கள் எல்லாம் அவர்கள் கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்திருந்தனர். அதன்பிறகு மாதவிடாய் நின்று, அப்போது நாற்பது வருடங்கள் ஆகியிருந்தது, அவர்கள் அப்பொழுதும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசித்துக் கொண்டிருந்தனர். அது-அது அற்புதமாயுள்ளது. 12. நாம் எல்லாருக்கும் அந்தவிதமான விசுவாசம் தான் அவசியம். அதைக் குறித்து தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். அது... வேதாகமம் தர்க்கம் பண்ணப்பட வேண்டியது அல்ல. அது... வேதாகமம் பிரசங்கம் பண்ணி, ஜீவிக்கப்பட வேண்டியதாகும். இயேசு, 'என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டாம். ஆனால் என் பிதாவின் கிரியைகளை நான் செய்வேனேயாகில், அந்த வார்த்தையை விசுவாசியுங்கள்' என்று கூறினார். இன்று, நாம் கிறிஸ்தவ ஜீவியம் செய்யாதவர்களாக இருந்தால், நல்லது அப்படியானால், நாம் கிறிஸ்தவர்கள் அல்லவென்று ஜனங்களால் கூற முடியும். ஆனால் கிறிஸ்து உங்களுக்குள் இருப்பாரானால், அவர் உங்களுக்குள் இருந்து தம்முடைய ஜீவனை ஜீவிக்கிறார். 13. பவுல், 'இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்' என்று கூறினது போல. கிறிஸ்து ஒரு மனிதனுக்குள் ஜீவிப்பாரென்றால், அவர்... அவர் இங்கே பூமியில் இருந்த போது, ஜீவித்தது போன்று தம்முடைய ஜீவனை கிறிஸ்து ஜீவிக்கிறார், அவர் அவ்வாறு கூறியுள்ளார். அவர், 'இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களோடு இருப்பேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்' என்றார். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார், அவர் இங்கே பூமியில் இருந்த போது, கொண்டிருந்த அதே வல்லமையில் அவர் இப்பொழுது இங்கேயிருந்து, அதே காரியங்களைச் செய்து கொண்டும், அதே வகையான ஜனங்களை இரட்சித்துக்கொண்டும், அதேவிதமான வியாதியஸ்தர்களை சுகமாக்கிக்கொண்டும், அதே விதமான தரிசனங்களைக் காண்பித்துக் கொண்டுமிருக்கிறார். 14. புதிய ஏற்பாட்டில், சபையானது முதலில் துவங்கின போது, பேதுரு சபைக்குத் தன்னுடைய செய்தியைக் கூறினான், தேவன், 'கடைசி நாட்களில், நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். உங்கள் வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்' என்றார். இயேசு செய்த காரியங்கள் மறுபடியுமாக கடைசி நாட்களில் செய்யப்படும் என்பதாக தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். நாம் அந்த நாட்களில் தான் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். இயேசு தாம் ஒரு மகத்தான சுகமளிப்பவர் என்று உரிமை கோரவில்லை. அவர் எல்லா துதியையும் தேவனுக்கே கொடுத்தார். அவர், 'நானாக எதையும் செய்ய முடியாது' என்றார். அவர் ஏன் வியாதிப்பட்ட எல்லா ஜனங்களையும் சுகமாக்கவில்லை என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, அவர் அவ்வாறு கூறினார். 15. அவர் வெளியே பெதஸ்தா குளத்திற்குச் சென்ற போது, அங்கே ஆயிரக்கணக்கான நொண்டிகள், வளைந்த உறுப்புக்களைக் கொண்டவர்கள், சப்பாணிகள், குருடர்கள் படுத்திருந்தனர். ஒரு படுக்கையில் (pallet) படுத்திருந்த ஒரு மனிதனை அவர் கண்டுபிடிக்கும் மட்டுமாக, அவர் அவர்கள் மத்தியில் நடந்து சென்றார். அவர் அவனைச் சுகமாக்கி விட்டு, மற்றவர்களை விட்டுச் சென்று விட்டார். அது பரிசுத்த யோவான் 5ம் அதிகாரம். 19ம் வசனத்தில் அவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. அவர், 'மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறோன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார். அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்' என்றார். கிறிஸ்து தேவனிடத்தில் பரிபூரண விசுவாசம் உள்ளவராயிருந்தார். இயேசு வெறுமனே சரீரம் தான், தேவன் தான் அவருக்குள் இருந்தார். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தைத் தமக்கு ஒப்புரவாக்கிக் கொண்டார் என்று வேதாகமம் கூறுகிறது. 16. இப்பொழுது, ஆபிரகாம், அவன் வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொண்ட நேரத்தில், பிரயாணம் பண்ணிப் போனான், பிறகு அவன் - தேவன் அவனுக்கு வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்தினார். எனவே லோத்து தன்னைத்தான் பிரித்துக்கொண்ட பிறகு, இப்பொழுது ஏறக்குறைய ஆதியாகமம் 18ம் அதிகாரத்தில் அவனை நாம் காண்கிறோம்; லோத்து வெளியே சோதோம் கொமோராவுக்குள் சென்றான், அது உலகத்திலும் உலகத்தில் உள்ளவைகளின் மீதும் அன்புகூரும் இன்றைய வெதுவெதுப்பான விசுவாசிகளுக்கு மிகவும் அழகான முன்னடையாளம். 'நீங்கள் உலகத்திலோ, உலகத்தில் உள்ளவைகளிலோ அன்புகூர்ந்தால், ஏற்கனவே உங்களுக்குள் தேவனுடைய அன்பு இல்லை' என்று வேதாகமம் கூறுகிறது. எனவே லோத்து பின்வாங்கிப் போனவர்களோடு கூட போய் விட்டான். ஆனால் ஆபிரகாமை தேவன் எங்கு வைத்திருந்தாரோ அவன் அங்கேயே தரித்திருந்தான், அவன் முழு காரியத்தையும் சுதந்தரிக்கப் போகிறான் என்று தேவன் அவனுக்கு வாக்குப்பண்ணியுள்ளார் என்பதை அவன் அறிந்திருந்தான். 17. இந்நிலையில் அந்த பூமியோ மோசமாக இருந்தது. அநேகமாக மந்தைகள் மிகவும் மெலிந்து போய் காணப்பட்டன. ஒரு நாள் ஆபிரகாம் அந்த கருவாலி மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டிருக்கையில், அவன் தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்த போது, தனக்கு முன்பாக மூன்று மனுஷர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சர்வவல்லமையுள்ள தேவன் தாமே. தேவன் ஏன் தம்மேல் தூசிபடிந்தவராக அந்த ரூபத்தில் தோன்றினார் என்பதைக் குறித்து வியப்படைகிறேன். ஆபிரகாம் அவரை உள்ளே அழைத்தான், அவன் போய் ஒரு கன்றுக்குட்டியைக் கொன்று, அந்த இறைச்சியை சமைத்து, கொஞ்சம் எண்ணெயையும், கொஞ்சம் பாலையும் எடுத்துக் கொண்டு வந்தான், சாராள் போய் கொஞ்சம் ரொட்டியையும் எடுத்துக் கொண்டு வந்தாள், அவன் அவர்கள் முன்பாக அவைகளை வைத்தான். சர்வவல்லமையுள்ள தேவன் ஒரு மனிதனைப் போன்று ஆகாரம் புசித்தார். தேவன் அங்கே என்ன செய்தார் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கிறீர்களா. அவர் கை நீட்டி (reached out), கைப்பிடி நிறைய அணுக்களையும், கொஞ்சம் பெட்ரோலியத்தையும், (பெட்ரோலி யத்தையும், எண்ணெய்களையும், மற்றும் காரியங்களையும் நீங்கள் அறிவீர்கள்) [சகோதரன் பிரன்ஹாம் மொழி பெயர்ப்பாளரிடம் பேசுகிறார்- ஆசிரியர்.] காஸ்மிக் வெளிச்சத்தையும் எடுத்து, மனித சரீரம் எவைகளைக் கொண்டு உண்டாக்கப்பட்டுள்ளதோ அவைகளை எடுத்து, அதை ஒன்று சேர்த்து, அதற்குள்ளே ஜீவித்தார். எப்படியும் அவர் என்னவாக இருந்தார் - அவர் என்னவாக இருக்கப் போகிறார் என்பதன் முன்காட்சியாக அது இருந்தது. அவர் கிறிஸ்து இயேசுவுக்குள்ளே மாம்சத்தில் வெளிப்பட்டார். 18. ஓ, அவர் அற்புதமானவர். ஏதோவொரு மகிமையான நாளில், நமது இந்த சரீரங்கள் அவை எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பிப் போகும். ஆனால் நம்முடைய ஆவி தேவனோடு சரியாக இருக்குமானால், உயிர்த்தெழுதலின் போது, ஒவ்வொவரும் மீண்டும் திரும்பி வருவோம். அன்றொரு நாள் நான்-நான் என்னுடைய தலைமுடியை வாரிக் கொண்டிருந்தேன், என்னுடைய மனைவி, 'பில்லி, உம்முடைய பெரும்பாலான தலைமயிரை நீர் இழந்து கொண்டிருக்கிறீர்' என்றாள். நான், 'ஆனால், தேனே, நான் அவைகளில் ஒன்றையும் இழந்து போகவில்லை' என்றேன். அவள், 'அவைகள் எங்கேயிருக்கின்றன?' என்று கேட்டாள். நான், 'நான் அவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பு, அவைகள் எங்கே-எங்கே இருந்தன? இப்பொழுது அங்கே தான் அவைகள் இருந்து, உயிர்த்தெழுதலில் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது' என்றேன். ஆமென். அவைகள் ஒருசமயம் இல்லாதிருந்தது. அதன்பிறகு ஒருசமயம் அவைகள் இருந்தது. இப்பொழுது, அவைகள் இல்லாத ஒரு நேரமாக இருக்கிறது. ஆனால் வேதாகமத்தின்படி, அவைகள் மறுபடியும் இருக்கும் ஒரு நேரம் வரும். 19. நான் அன்றொரு நாளில், ஒரு மருத்துவரை சந்தித்தேன். நான், 'டாக்டர், நாம் ஒவ்வொரு தடவை ஆகாரம் புசிக்கும் போதும், நம்முடைய சரீரத்திலுள்ள இரத்த - இரத்த உயிரணுக்களை நாம் உருவாக்கி, அது நம்மை வளரச் செய்கிறது என்பது உண்மை தானா?' என்று கேட்டேன். அவர், 'அது உண்மை' என்றார். நான், 'நான் உம்மிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். எனக்கு 16 வயதிருக்கும் போது, நான் புசித்த அதே விதமான ஆகாரத்தையே இப்பொழுதும் புசித்து வருகிறேன். எனக்கு 16 வயதில், நான் ஆகாரம் புசித்த போது, நான் வளர்ந்து, திடகாத்திரமாகவும், பெரியவனாகவும் ஆனேன். இப்பொழுதோ, நான் அதே ஆகாரத்தையே புசிக்கிறேன், ஒருக்கால் அதிலும் மேலான அதிக ஆகாரங்களையே புசிக்கிறேன், (ஆனால்) நான் எல்லா நேரமும் வயதானவனாகவும் பலவீனமானவனாகவும் ஆகி வருகிறேன். அதை விளக்குங்கள்' என்றேன். அது விஞ்ஞானப்பூர்வமானதல்ல. இந்தக் கண்ணாடிக் குவளையில் தண்ணீரை எடுத்து, நீங்கள் அதில் இன்னும் அதிக தண்ணீரை ஊற்றுவீர்களானால், அது அப்படியே தொடர்ந்து முழுவதும் நிரம்பி நிரம்பிக் கொண்டேயிருக்கும். ஆனால் அது ஏன் அவ்வாறு இருக்கிறது, அது குறிப்பிட்ட இடம் வரை நிரம்பும் போது, நீங்கள் அதில் தொடர்ந்து தண்ணீரை ஊற்றிக்கொண்டேயிருப்பீர்களானால், அது தொடர்ச்சியாக கீழே வழிந்த வண்ணம் இருக்கும்? ஏனென்றால் தேவன் அவ்வாறு கூறியிருக்கிறார். அதுதான் காரணம். தேவனுக்கு ஒரு வழி உண்டு. அப்படியே அந்த மலரைப் போன்று, அது துவங்கி, முழு முதிர்ச்சி அடைந்த நிலைக்கு வருகிறது, அதன்பிறகு அது வாடி வதங்கிப் போக துவங்குகிறது, ஆனால் அது மீண்டும் திரும்பி வருகிறது. 20. இப்பொழுது, தேவன் அங்கே ஒரு சரீரத்தில் ஆபிரகாமைச் சந்தித்து, அவர் அவனிடம் அதைக் கூறின போது, அவன் அவருடைய கால்களிலிருந்த தூசியைக் கழுவ வேண்டியதாயிருந்தது. அது தேவன் என்று வேதாகமம் கூறுகிறது... அவர் கூடாரத்துக்குப் பக்கமாகத் தம்முடைய முதுகைத் திருப்பியிருந்து, அவர், 'ஆபிரகாமே, சாராள் எங்கே?' என்று கேட்டார். 'அவள் கூடாரத்தினுள் இருக்கிறாள்' என்று அவன் கூறினான். அவர், 'ஸ்திரீகளுக்கு இருப்பதைப் போன்று, ஒரு உற்பவகாலத்திட்டத்தில், நான் உன்னைக் காண வருவேன்' என்று கூறினார். சாராள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். சாராள் அதைக் கேட்ட போது, தன் இருதயத்தில் நகைத்தாள், உரத்த சத்தமாக அல்ல. சாராள் இருந்த கூடாரத்தின் பக்கமாக தம்முடைய முதுகைத் திருப்பினவராக அவர் இருந்தார் என்று வேதாகமம் கூறுகிறது, அவர் ஆபிரகாமை நோக்கிப் பார்த்து, 'சாராள் ஏன் நகைத்தாள்?' என்று கேட்டார். நான் என்ன கூற கருதுகிறேன் என்று புரிகிறதா? தேவனுக்கு எல்லாம் தெரியும். நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அவருக்குத் தெரியும். உங்களுக்கு என்ன கோளாறு உள்ளது என்று அவருக்குத் தெரியும். அது எப்போதுமே தேவனுடைய ஒரு அடையாளமாக இருந்து வருகிறது...?... பாருங்கள், முன்னறிந்து, முன்னறிவித்தல். கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீயைப் பார்த்து, அவளுக்கு ஐந்து புருஷர்கள் உண்டு என்று இயேசு அவளிடம் கூறின போது, அந்த ஸ்திரீயைக் கவனித்துப் பாருங்கள். ஏன்-ஏன் அவள், 'மேசியா வரும்போது, இவைகளைச் செய்வார் என்று எனக்குத் தெரியும்' என்று கூறினாள், ஆனால் அவர் ஒரு தீர்க்கதரிசி என்று அவள் நினைத்தாள், ஆனாலும் தான் தேவகுமாரன் என்று அவர் அவளிடம் கூறினார். அவர் இன்றைக்கும் மாறாதவராக இருக்கிறார். அது அங்கே முற்காலத்தில் ஆபிரகாமோடு இருந்து, ஒரு சரீரத்தில் வெளிப்பட்ட தேவ குமாரனாக இருந்தது. ஓ, உங்களுக்கு அது புரிகிறது என்று நம்புகிறேன். 21. இப்பொழுது, கவனியுங்கள், அப்போது தேவன் அதைக் கூறினார், அதன்பிறகு அது அடுத்த மாதமாக இருந்தது. அது நின்று போய் 40 வருடங்கள் கழித்து, அடுத்த மாதத்தில், ஸ்திரீகளுக்கு இருப்பது போன்று சாராளுக்கும் இருந்தது. இங்கே வேறொரு சிறிய காரியத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். என்னுடைய சகோதரர்களே, நீங்கள் இதை குறை கூறப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் சற்று நேரம் அமைதியாக இருந்து, நீங்கள் வீட்டிற்குப் போன பிறகு, நீங்கள் இதை ஆராய்ந்து பார்க்க விரும்புகிறேன். அங்கே தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தைக் கொடுத்த போது, அவர் அவனுக்கு என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது, சாராளுக்கு ஏதோ சம்பவித்திருக்க வேண்டும் என்று நம்மெல்லாருக்கும் தெரியும். அவளுக்கு கிட்டத்தட்ட 100 வயதாக இருந்தது. இப்பொழுது, நீங்கள் வேதாகமத்தை வாசிக்கும் போது, ஏதோவொரு பள்ளியிலிருந்தோ அல்லது ஏதோவொரு வேதாகம கல்லூரியிலிருந்தோ வந்திருந்த அனுபவம் மட்டுமே உங்களுக்குக் கிடைத்திருக்குமானால், நீங்கள் ஏதோவொன்றைத் தவற விட்டு விடுகிறீர்கள். 22. கவனியுங்கள், நீங்கள் முதலாவது தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தாக வேண்டும். நீங்கள் அவ்வாறு மறுபடியும் பிறந்திராவிட்டால், தேவனுடைய வார்த்தை உங்களுக்கு ஒருபோதும் புரியவே புரியாது. தேவன் அவ்வாறு கூறியுள்ளார். 'இந்த வேதாகமத்தை நான் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, விசுவாசிப்பவர்களைப் போன்ற பாலகருக்கு வெளிப்படுத்துவேன்' என்று தேவன் கூறியுள்ளார். நீங்கள் தேவனிடமிருந்து எதையாகிலும் பெற்றுக்கொள்ள விரும்பினால், வெறுமனே ஒரு குழந்தையாக இருங்கள். வேதாகமத்தை திறவுங்கள். இயேசுவை நேசிக்கத் தொடங்குங்கள். 23. இப்பொழுது, என்னுடைய மனைவி எனக்கொரு கடிதத்தை எழுதும் போது, நல்லது, நான் அதை வாசிக்கிறேன். அவள் தொடங்கி, 'அன்புள்ள பில்லி, நான் இன்றிரவு இங்கே உட்கார்ந்து, உம்மைக் குறித்தே அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்' என்று எழுதியிருப்பாள். அதைத்தான் அவள் அந்தத் தாளில் எழுதியிருக்கிறாள், ஆனால் அந்த வரிகளுக்கு இடையே என்ன இருக்கிறது என்பதையும், அவள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பதையும் என்னால் கூற முடியும். நீங்கள் நிச்சயமாக வேதாகமத்தில், வரிகளுக்கு இடையே வாசித்தாக வேண்டும், ஏனென்றால் வெறும் வார்த்தையாக மட்டுமே அதை வாசிப்பவரிடமிருந்து தேவன் அதை மறைத்து வைத்திருக்கிறார். ஞானிகளின் கண்களுக்கும் கல்விமான்களின் கண்களுக்கும் அவர் அதை மறைத்து வைத்து, கற்றுக்கொள்பவரைப் போன்ற பாலகருக்கு வெளிப்படுத்தின வேதவாக்கியத்தையே நான் மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறேன். வேதாகமத்தை எப்பொழுதாவது வாசித்திருப்பவர்கள் எல்லாரும், 'ஆமென்' என்று கூறுங்கள். [சபையார், 'ஆமென்' என்கின்றனர் - ஆசிரியர்.] அப்படியானால் தன்னைத்தான் தாழ்த்தும் குழந்தையாக அது இருக்கிறது, தற்பெருமையோடு இறுமாப்பாய் இருப்பதல்ல, ஆனால் தாழ்மையோடு இருந்து, 'கர்த்தாவே, நான் அதை விசுவாசிக்கிறேன்' என்று கூறுங்கள். 24. என்னுடைய நண்பர்களில் ஒருவராகிய ஜான் ஸ்பிரெல் (John Sproul) அவர்கள் ஒரு சிறு பயணமாக பிரான்சுக்கு வந்திருந்தார். அது அல்ஸாஸ் லோரெய்ன் (Alsace Lorraine) என்று நம்புகிறேன். அவர் ஒரு தோட்டத்திற்குள் நடந்து சென்ற போது, அங்கே இயேசுவின் உருவச் சிலை ஒன்று இருந்தது... 2 2